சொறிக்கல்முனை பங்கு தந்தை ஒரு சாதனையாளர் - மட்டு. ஆயர் பாராட்டு

Report Print Nesan Nesan in சமூகம்

சொறிக்கல்முனை பங்கு தந்தை அருட்பணி சு.திருட்செல்வம் ஓர் சாதனையாளர் என மட்டு. ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சொறிக்கல்முனை திருத்தலத்தில் முதல் நன்மையும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனங்களை வழங்குதலும், புதிதாக அமைக்கப்பட்ட குரு மனையையும் காரியாலயத்தையும் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,

சொறிக்கல்முனை பங்கு தளத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த ஒரு புதிய குருமனையும், காரியாலயமும் இன்று பூர்த்தி செய்யப்படுகின்றது.

இதனை கட்டி முடிப்பதற்கு பலரும் பல வழிகளில் உதவி செய்துள்ளனர். பண வடிவிலோ, சேவை வடிவிலோ, உடல் மற்றும் உழைப்பு வடிவிலோ, செப உதவியாகவோ தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

விசேட விதமாக சொறிக்கல்முனை பங்கு மக்கள் தங்கள் பங்களிப்பை காத்திரமான முறையில் வழங்கியுள்ளனர்.

சொறிக்கல்முனை பங்கு மக்கள் பொருளாதாரத்திலும், ஆன்மீகத்திலும் கல்வியிலும் தொடர்ந்து முன்னேற தனது ஆசியை வழங்குவதாக ஆயர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அருட்பணி சு.திருட்செல்வம் கூறுகையில்,

இறைவனின் ஆசியாலும், ஆயரின் வழிகாட்டலினாலும் குருக்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்களின் ஒத்துழைப்பாலும் இன்று ஓர் கனவு நனவாகின்றது.

இந்த திருச்சிலுவை திருத்தலத்தை நோக்கி இலங்கையின் பல பாகங்களில் இருந்து இன, மொழி, சமய வேறுபாடின்றி பக்தர்கள் வருகை தருகின்றார்கள்.

எனவே இந்த திருத்தலத்திற்கு ஓர் காரியாலயமும் குருமனையும் அமைந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இதற்கான அத்திவாரத்தினை முன்னை நாள் பங்குத்தந்தை அருட்பணி யேசுதாசனால் இடப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

அவரது இடமாற்றத்தின் பின்னர் இன்று இந்த கட்டடம் முழுமை பெறுகின்றது என்றார்.

அதனைத் தொடர்ந்து ஆயரால் வழிபாடு நடத்தப்பட்டு நினைவு கல் திரை நீக்கம் செய்யப்பட்டு புதிய மனை ஆசீர்வதிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் குரு முதல்வர், நிதி பொறுப்பாளர், மற்றும், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறை மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

advertisement