கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் தெளிவூட்டும் வகையிலான ஆர்ப்பாட்டப் பேரணி

Report Print Navoj in சமூகம்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழகத்தை அண்டியுள்ள மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலான ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நேற்று மேற்கொண்டுள்ளனர்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முற்றுகைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போது அதில் இரண்டு முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையிலும், நிர்வாகக் கட்டிட முற்றுகைப் போராட்டம் 21 நாட்களைக் கடந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பேரணியில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியிருந்தனர்.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லியனாராச்சி கருத்துத் தெரிவிக்கையில்,

மாணவர்களின் உரிமை தொடர்பான போராட்டத்திற்கு இதுவரையில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் நிர்வாகத்தால் எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு தொடர்ந்து செயற்படுவார்களாயின் தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாத்திரமே எம்முடன் ஆதரவிற்கு வந்துள்ளது.

இனிவரும் காலங்களில் இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவையும் பெற்று எமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்க நேரிடும் என்று தெரிவித்தார்.