சிவில் உடையில் வந்த பொலிஸார் சிறுவன் மீது தாக்குதல் - வவுனியாவில் சம்பவம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் மாடு மேய்ச்சலுக்குச் சென்ற சிறுவனை சிவில் உடையில் வந்த பொலிஸார் கடுமையாக தாக்கிய சம்பவமொன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதில் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிக்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா - ஓமந்தை, வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த சற்குணராஜா டிஷாந் (வயது 14) மற்றும் அவருடைய சகோதரரான சற்குணராஜா தினேஸ் (வயது 08) ஆகிய இருவரும் நேற்று பிற்பகல் தமது மாடுகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

வீட்டிற்கு 500 மீற்றர் தூரத்தில் இருக்கும் அரசமுறிப்பு குளத்தடி மேய்ச்சல் தரைக்கு அவர்கள் சென்ற வேளையில் அப்பகுதிக்கு, சிவில் உடையில் ஆயுதம் தரித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட நான்கு பொலிஸாரை கொண்ட குழுவொன்று வந்துள்ளது.

இந்த நிலையில் அவர்கள் குறித்த சிறுவர்களை பிடித்து கள்ள மாடு பிடிக்க முயன்றதாக கூறியுள்ளதுடன், டிஷாந் என்ற சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அத்துடன் குறித்த சிறுவனை முழங்காலில் நிறுத்தி துன்புறுத்தியுள்ளதுடன், கழுத்தில் கயிறு ஒன்றையிட்டு மரத்தில் போட்டுவிட்டு தூக்கிலிடுவோம் என அச்சுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவ இடத்தில் நின்ற மற்றைய சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்று சகோதரியிடம் நடந்தவற்றை கூறியதும் பொதுமக்களும் சேர்ந்து அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொழுது பொலிஸார் இல்லை எனவும் அங்கிருந்தவர்களால் முறைப்பாடு செய்யச் சென்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன், முறைப்பாடு பதிவு செய்ய வேண்டாமென கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாருடன் பேசிய அப்பகுதி கிராம சேவையாளர் பொலிஸாருடன் உரையாடி சுமுக தீர்வொன்றிற்கு வருமாறு தெரிவித்ததாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கிராமசேவையாளரை எமது ஊடகவியலாளர் தொடர்பு கொண்ட போது, தனக்கு கள்ள மாடு கடத்தப் படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நான் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டிருந்தேன்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரிடம் தகவல் வழங்கியிருந்தேன். இருப்பினும் அங்கு அவர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.