பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள்

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். பல்கலைக்கழகப் பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் நடந்து கொண்ட இரு நிர்வாக அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி பணிப் பகிஷ்கரிப்புக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் இன்றைய தினம் பணிப் பகிஷ்கரிப்பிற்கான அழைப்பினை விடுத்திருக்கிறது.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குக் கடிதமொன்று எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் இவ்வசம்பாவிதம் இடம்பெற்று ஒருவாரமாகியும் எவ்வித நடவடிக்கைகளும் நிர்வாகத்தினால் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளின் தகாத செயலைக் கண்டித்தும், அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை(08) காலை-10 மணிக்கு ஊழியர் சங்கத்தினது சகல அங்கத்தவர்களும் தத்தமது பணியிடங்களிலிருந்து வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.