ஈழத்தமிழர் அனுபவித்த கொடுமைகளை இப்போது அனுபவிக்கும் ரோஹிங்கிய மக்கள்!

Report Print Samy in சமூகம்

பௌத்தர்கள் என்றால் இனவாதிகள் என்ற தீர்க்கமான முடிவுக்கு வர மியன்மாரையும் ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ள முடியும்.

இலங்கையில் பௌத்த பேரினவாதிகளால் தமிழர்களின் சுதந்திரத்துக்கான மூச்சுக்காற்று எவ்வாறு நசுக்கப்பட்டதோ, அவ்வாறு மியன்மாரில் இஸ்லாமியர்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது. அவர்களின் உரிமைகள் துப்பாக்கி முனைகளில் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.

மியன்மார் பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு.

இலங்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் உள்ளதைப்போல் மியன்மாரில் சிறுபான்மையினராக ரோஹிங்கிய இனத்து முஸ்லிம்கள் மியன்மார் – பங்களாதேஷ் எல்லையில் உள்ள ‘ரக்கினே’ எனும் மாகாணத்தில் உள்ளனர்.

ரோஹிங்கியர்களின் பூர்வீகம் மியன்மாருக்கானது அல்ல. அவர்கள் பங்களாதேஷைச் சார்ந்தவர்கள். பங்களாதேஷில் இருந்து சில தசாப்தங்களுக்கு முன்னர் அகதிகளாகச் சென்று குடியேறிய அவர்களை, மியன்மார் ஆட்சியாளர்கள் தத்தமது அரசியல் இருப்பைத் தக்க வைப்பதற்காக இனச் சுத்திகரிப்பை செய்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

எனவே மியன்மார் இராணுவத்துக்கு எதிராக ரோஹிங்கியர்கள் சிலர் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் பின்னணியிலேயே அவர்கள் மீதான வதை காலாகாலமாகத் தொடர்ந்து வருகிறது.

ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் மீது மியன்மார் அரச படைகள் மேற்கொள்ளும் இனச் சுத்திகரிப்பைக் கண்டித்து ரோஹிங்கிய ஆயுதக் குழுவொன்று கடந்த மாதம் 25ஆம் திகதி தாக்குதலை நடத்தியது.

அதில் 10 சிப்பாய்கள் உயிரிழந்தனர். இதையடுத்தே ஒட்டுமொத்த ரோஹிங்கியர்களையும் ஒரே தராசில் வைத்து தனது மனித வேட்டையை கொடூரமாக நடத்தி வருகிறது மியன்மார்.

சிறுவர் பாலியல் துர்நடத்தை, சிறுவர் பாலியல் வன்புணர்வு, வன்புணர்வு, சிறுவர் கொலைகள், கொலைகள் சித்திரவதை என்று ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் அனுதினம் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பிலான இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது

மியன்மாரில் இருந்து தமது உயிரைக் கையில் பிடித்தபடி பங்களாதேஷ் நோக்கி ஓடுபவர்களை பங்களாதேஷ் அவ்வளவு இலகுவில் அனுமதிப்பதில்லை. அது மீண்டும் மியன்மாரை நோக்கி அவர்களை அடித்து விரட்டுகிறது.

இது தொடர்பான விடயங்களை பன்னாட்டு ஊடகங்கள் பலவும் ஆதாரப்படுத்தியுள்ளன. பல ரோஹிங்கியர்களுக்கு மியன்மார் – பங்களாதேஷ் எல்லையில் உள்ள சகதி நிலம் மனிதப் புதைகுழியாக மாறிவிட்டது.

மியன்மார் தனது எல்லைகளை ஆசியாவின் இருபெரும் ஜாம்பவான்களான இந்தியா மற்றும் சீனாவுடனும் பகிர்ந்து கொள்கிறது.

இந்தப் படுகொலைகளை தட்டிக்கேட்க வேண்டிய இந்த இரு நாடுகளும், மியன்மாருக்கு பக்கவாத்தியம் இசைக்கின்றனவே தவிர அதை அதட்டுவதற்கு முன்வரவில்லை.

காரணம் சீனா அல்லது இந்தியா இவற்றில் ஏதேனும் ஒன்று ஆசியாவின் ஜாம்பவானாக உருவெடுக்க வேண்டுமாயின் அதற்கு ஒரு ஆசிய நாடு என்ற வகையில் மியன்மாரின் ஆதரவு தேவை.

சீனாவுக்கான எரிபொருள் இறக்குமதியில் பெரும் பகுதி மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்கா நீரிணையூடாக நடைபெறுகின்றது.

உலக வர்த்தகத்தின் முக்கிய புள்ளிகளில் ஒன்றான மலாக்கா நீரிணையில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தையும் சீனாவின் ஏற்றுமதியையும் தடை செய்ய முடியும். இதனால் தனக்கென ஒரு விநியோகப் பாதையை மியன்மாரின் ஊடாக சீனா உருவாக்கியது.

இந்தப் பாதை சீனாவின் யுனான் மாகாணத்தில் ஆரம்பித்து மியன்மாரின் இரவாடி நதியூடாகச் சென்று மியன்மாரின் தலைநகர் சென்று பின்னர் இந்துமாக்கடலை அடைகின்றது. இது மட்டுமல்ல சீனாவின் முத்து மாலைத் திட்டம் மியன்மாரின் ‘சிட்வே’ துறைமுகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது.

மியன் மாரின் கனிம வளங்களும் வெளிநாட்டுக் கொள்கையும் சீனாவின் கரங்களிலேயே இருந்தன என விமர்சிப்ப துண்டு. மியன்மாரின் கனிம வளங்களை அகழ்வு செய்யும் உரிமத்தையும் இராவாடி நதியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் உரிமையையும் சீனா தனதாக்கிக் கொண்டது.

2007ஆம் ஆண்டு மியன்மாரின் கடலில் இயற்கை வாயு ஆய்வுக்கான ஒப்பந்தத்தையும் சீனா செய்து கொண்டது. எனவே ரோஹிங்கியர்களுக்காக மியன்மாரைப் பகைத்து இவ்வாறான பெரும் ஒப்பந்தங்களை கைவிடுவதற்கு சீனா விரும்பாது.

இந்தியாவைப் பொறுத்தவரையிலும் மியன்மாரை அரவணைக்க வேண்டிய தேவை அதற்குள்ளது. கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தான் இந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி மியன்மாருக்குச் சுற்றுப் பயணம் செய்திருந்தார்.

இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா – மியன்மார் இடையே 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. அது மட்டுமல்லாமல் இந்தியச் சிறையில் இருந்த 40 கைதிகளை விடுவித்து உத்தரவிட்டார் மோடி. மியன்மார் மக்கள் இந்தியாவுக்கு செல்வதற்கு நுழைவிசைவுத் தளர்வு நடவடிக்கைகளையும் மோடி மேற்கொண்டுள்ளார்.

இவை இந்தியா மியன்மாருக்கு எவ்வளவுக்கு வளைந்து கொடுக்கிறது என்பதற்கு தக்க சான்றாதாரங்களாக அமைந்துள்ளன. எனின் ரொஹிங்யர்களுக்கான நீதி?

ஐக்கிய நாடுகள் சபையின் நோபல் பரிசென்பது பலருக்குக் கனவு, பலருக்கு அவா, பலருக்கு தியாகம், பலருக்கு அர்ப்பணிப்பு.

ஆனால் மியன்மார் அரசின் ஆலோசகர் ஆங் சாங் சூகியின் நடத்தையின் முன்னால் நோபல் பரிசிலும் அர்த்தமற்றதாகி விட்டது.

அன்னை திரேசாவுக்கு வழக்கப்பட்ட அதே நோபல் பரிசில்தான் 1991ஆம் ஆண்டில் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைதிக்கான விருதான ‘சக்காரோவ்’ விருதும் ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்டது.

1992ஆம் ஆண்டில் இந்திய அரசின் அமைதிப் பரிசான ஜவகர்லால் நேரு விருதும் இவருக்குக் கிடைத்தது. 2007ஆம் ஆண்டு கனடா இவரை தனது பெருமைக்குரிய குடிமகளாக அறிவித்தது.

இத்தனை மகுடங்களும் சூகிக்கு வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் அவர் அமைதியை நிலைநாட்ட வல்லவர், இராணுவ ஆதிக்கத்தை தகர்த்து எறியக் கூடியவர் என்பதால் தான்.

ஆனால் சூகி பெற்ற விருதுகளை யும் ரோஹிங்கியர்களுக்கு இவரின் ஆட்சியில் இழைக்கப்படும் அநீதிகளையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் அமைதிக்கான நோபல் பரிசில்கூட அர்த்தமற்றதாக மாறி விடுகிறது.

நோபல் பரிசில் வென்ற மற்றொரு பெண்ணான மலாலா ரோஹிங்கியர்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்துள்ளார். அவர் ‘‘ ரோஹிங்கியர்களின் விடயத்தில் சூகி என்ன செய்யப் போகிறார் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது’’ என்று குறிப்பிட் டுள்ளார்.

ஆனால் ‘‘ ரோஹிங்கியர்கள் இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று வெளியாகும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை’’ என்று ஒற்றை வரியில் பதில் வழங்கியுள்ளார் சூகி.

மியன்மாரில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது கண்டனத்தை ஏற்கனவே பதிவு செய்துள்ளது. ஆனால் கண்டன அறிக்கை என்ற ஒன்றுக்கு அப்பால் சென்று ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் ஐக்கிய நாடுகள் சபை எடுத்தது என்று தகவல்கள் எதுவுமில்லை.

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளில் முண்டியடித்துக்கொண்டு தனது கண்டனங்களைத் தெரிவிப்பதிலும், பொருளாதாரத் தடைகளை விதிப்பதிலும் காட்டும் முனைப்பை மியன்மார் விடயத்திலும் ஐ.நா. சபை காட்டியிருந்தால்,

ரோஹிங்கியர்கள் இன்று லட்சக்கணக்கில் அகதிகளாகும், ஆயிரக் கணக்கில் கொல்லப்படும் துர்ப்பாக்கிய நிலை வராமல் தடுத்திருக்கலாம்.

அவ்வாறானால் ஐ.நா. என்றொரு பல மிக்க அமைப்பு இயங்குவதன் அர்த்தம் தானென்ன?