கனடாவுக்கு கடத்தப்படவிருந்த கிளிநொச்சியை சேர்ந்த பெண்கள்! நேபாளத்தில் மீட்பு

Report Print Murali Murali in சமூகம்

நேபாளம் வழியாக கனடாவிற்கு அனுப்பப்படவிருந்த இலங்கை பெண்கள் இருவர் ஆட்கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளம் நாட்டின் மத்திய பொலிஸ்துறை புலானாய்வு பிரிவினர் மற்றும் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு என்பன இணைந்து குறித்த இரு பெண்களையும் கடந்த 25ஆம் திகதி மீட்டுள்ளனர்.

Tridevi Marga, Thamel பகுதியில் அமைந்துள்ள Bishwonath என்ற விடுதியை அந்நாட்டு மத்திய பொலிஸ்துறை புலானாய்வு பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது கிளிநொச்சியை சேர்ந்த 24 மற்றும் 33 வயதுடைய இரண்டு பெண்களை மீட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு அழைத்து செல்வதாக தரகர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த இருவரும் முதலில் இந்தோனேஷியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என நேபாள நாட்டின் பொலிஸ் ஊடக பேச்சாளர் SP Mira Chaudhary தெரிவித்துள்ளார்.

நேபாளத்தை பயன்படுத்தி கனடாவுக்கு ஆட்களை கடத்தும் முகவர் ஒருவரால் அவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் காத்மண்டுவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த இரு பெண்களும் ஏமாற்றப்படுவதற்கு முன்னர் தரகரால் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த இருவரும் விடுதியில் தங்கியிருந்தமைக்கான 3 லட்சம் ரூபா பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை அந்த பெண்கள் அறிந்துள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலிருந்து ஆண்கள் மற்றும் பெணகள் எனப் பலரும் நேபாளம் வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர்.

இலங்கையிலிருந்து நேபாளத்திற்கு எளிய முறையிலான விமான போக்குவரத்து மற்றும் வீசா முறைமை என்பவற்றை ஆட்கடத்தல் காரர்கள் இதற்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.