பணிப்புறக்கணிப்பால் ஸ்தம்பிதமடைந்த வைத்திய சேவை - நோயாளர்கள் பாதிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா மாவட்டத்தில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பால் வைத்திய சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது.

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், சுழற்சி முறையிலான வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் டிக்கோயா, வட்டவலை, கொட்டகலை, லிந்துலை, நானுஓயா உட்பட மலையகத்தின் பல வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பின் காரணமாக பெரும்பாலான வைத்தியசாலைகளில் வைத்திய சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த நோயாளிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன முழுமையாக செயலிழந்த போதும், அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.