கெலிவத்தை தோட்ட தேயிலை தொழிற்சாலையை மூடுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

திம்புளை - பத்தனை, கெலிவத்தை தோட்டத்தில் இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனை கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 180 தொழிலாளர்கள் நேற்றைய தினம் ஆரம்பித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்றைய தினமும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் பணிப்பகிஸ்கரிப்பினை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தொழிலாளர்கள் இன்று காலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினையும் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

ஒன்பதாவது தடவையாகவும் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்று சிறந்து விளங்கிய தொழிற்சாலையை காரணங்கள் எதனையும் தெளிவுப்படுத்தாமல் மூடிவிட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

இந்த விடயம் தொடர்பாக சொழிற்சங்கங்களின் கவனத்திற்கும் தோட்ட கமிட்டிகள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் தனி ஒரு தொழிற்சங்கம் ஊடாக இந்த பிரச்சினையை தீர்க்க மக்கள் தயாராக இருந்தால் பிரச்சினைக்கு தீர்வு பெற்று தரப்படும்.

இல்லையேல் முடியாது என தொழிற்சங்கம் ஒன்று தெரிவித்ததையடுத்து தோட்டகமிட்டிகள் திரும்பி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கெலிவத்தை தோட்ட தேயிலை தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகள் கடந்த 01.09.2017 அன்று முதல் தோட்ட நிர்வாகத்தினால் முடக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தொழிற்சாலையில் அரைக்கப்பட்டு வந்த தேயிலை கொழுந்து, கொட்டகலை ஸ்டோனிகிளிப் மற்றும் போகாவத்தை தோட்டப்பகுதி தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இதனால் தொழிற்சாலையில் பணியாற்றிய 80 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை இயங்காவிட்டால் எதிர்காலத்தில் கெலிவத்தை தோட்டத்தின் தேயிலை தோட்ட தொழில் செயழிலந்து விடும்.

எனவே தொழிற்சாலையை தொடர்ச்சியாக திறந்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வரை நாம் போராடுவோம் என தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொழிலாளர்கள் கையொப்பமிட்ட தொலைநகல் மற்றும் தந்தியை இன்று அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக தொழிலாளர்களின் தோட்டக் கமிட்டியினர் கூறியுள்ளனர்.