பால் கொள்வனவை நிறுத்திய தனியார் நிறுவனம்: மக்கள் அவதி

Report Print Theesan in சமூகம்

மாந்தை கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வாதார தொழிலாக பால் விநியோகம் காணப்படுகின்ற நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஒரு நாளைக்கு இரு தடவைகள் பால் வழங்கி வருகின்றனர்.

எனினும், தற்போது குறித்த தனியார் நிறுவனம் மாலை நேரப்பாலை, மக்களிடமிருந்து கொள்வனவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதாக பாண்டியன்குளம், செல்வபுரம், சிதம்பரபுரம் உட்பட பல கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மாலை நேர பாலை என்ன செய்வதென்று தெரியாது தாங்கள் திண்டாடிக்கொண்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து காலை நேரப்பால், மாலை நேரப்பால் என இரு தடவைகள் பெற்றுகொள்ளும் முறையை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அந்த பிரதேச மக்களும் அவ்வாறே அந்த நிறுவனத்திற்கு பாலை வழங்கி வந்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு தங்களின் நாளாந்த வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கோடு வங்கிகளில் கடனை பெற்று பால் மாடுகளை கொள்வனவு செய்து பால் விநியோகத்தை நாளொன்றுக்கு இரு தடவைகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

பாலின் வருமானத்தினை நம்பி தவணை முறையில் பெற்றுக்கொண்ட குளிரூட்டிக்கான மாதாந்த வட்டிப் பணத்தினையும், அதிக பாலை வழங்குவதற்காக விலையுயர்ந்த தரமான பால் மாடுகளை வாங்குவதற்காக வங்கியில் பெற்ற கடனையும் செலுத்த முடியாமல் உள்ளோம்.

கடன் சுமை அதிகரித்தால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.

அரச உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவன உயர் அதிகாரிகளே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது வன்னி மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என மக்கள் கூறியுள்ளனர்.

பால் கொள்வனவு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பாதிக்கப்பட்ட மக்களால் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண பிரதி அவைத்தலைவர் , வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் , மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் , மாந்தை கிழக்கு கால்நடை வைத்திய அதிகாரி, குறித்த தனியார் நிறுவனம் ஆகியவற்றிக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த விடயம் தொடர்பாக குறித்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக வினவ முற்பட்ட போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.