வைத்தியசாலை கழிவுகளை மக்கள் குடியிருப்பு பகுதியில் கொட்ட முற்பட்டதால் முறுகல் நிலை

Report Print Kari in சமூகம்

மட்டக்களப்பு பிரபல தனியார் வைத்தியசாலையின் கழிவுகளை மக்கள் குடியிருக்கும் பெரிய உப்போடை பகுதியில் மறைமுகமாக போடுவதற்கு முயற்சிக்கப்பட்ட நிலையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இரத்தம் படிந்த ஆடைகள், பஞ்சுகள், சேலைன் மற்றும் ஊசி போன்ற சுகாதாரத்திற்கு கேடான பொருட்கள் இவ்வாறு வீச முற்பட்டதாக தெரிவித்து மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில், தற்போது மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் கழிவகற்றல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் நகரமே துர் நாற்றம் எடுக்கும் நிலை தோன்றியுள்ளது.

இருந்த போதிலும் வைத்தியசாலை கழிவுகளில் எரிக்க வேண்டிய பொருட்களை மக்கள் செரித்து வாழும் குடியிருப்புகளில் கொண்டு புதைத்து வருகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த மட்டக்களப்பு மாவட்ட பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொட்டப்பட்ட கழிவுகளை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அத்துடன் சட்டத்திற்கு முரணாக குறித்த பகுதியில் வைத்தியசாலை கழிவுகளை கொட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு குறித்த தனியார் வைத்தியசாலைக்கும் அதனை கொட்டியவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக செய்தி - குமார்