புற்றுநோய் ஸ்கேனர் இயந்திரக் கொள்வனவுக்கு நிதிசேகரிக்க முன்னின்ற இளைஞர் மரணம்

Report Print Aasim in சமூகம்

மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு பெட் ஸ்கேனர் இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதிசேகரிப்பை மேற்கொண்ட இளைஞர் ஹுமைத் இன்று காலமானார்.

புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஹுமைத் முஹம்மத் எனும் குறித்த இளைஞர் மஹரகம புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலப்பகுதில் பெட் ஸ்கேனர் கருவியின் தேவைப்பாட்டை உணர்ந்திருந்தார்.

அரசாங்க மருத்துவமனையில் குறித்த கருவி இன்மையால் புற்றுநோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் தமது நோயின் தன்மை குறித்து அறிந்துகொள்வதற்காக தனியார் மருத்துமனைகளில் பெட் ஸ்கேன் வசதியைப் பெற்றுக் கொள்ள பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டியிருந்தது.

இதுகுறித்துப் பெரும் மனவருத்தம் கொண்ட ஹுமைத் முஹம்மத் தனது தந்தையார் முஹம்மத் ஹாஜியாருடன் இணைந்து அவரது கதீஜா பவுண்டேசன் ஊடாக பெட் ஸ்கேனர் இயந்திரக் கொள்வனவிற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அதன் மூலம் 260 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டு சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.டெண்டர் கோரல் மூலம் பெட் ஸ்கேனர் இயந்திரம் கொள்வனவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்த நிலையில் புற்றுநோய் முற்றியதன் தாக்கம் காரணமாக இளைஞர் ஹுமைத் முஹம்மத் இன்று உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை தெஹிவளையில் நடைபெற்ற அவரது ஜனாசா நல்லடக்கத்தில் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர்.