இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட 15 நாட்கள் தேவை

Report Print Suman Suman in சமூகம்

இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட பதினைந்து நாட்கள் தேவை என பூநகரி பிரதேச செயலர் கி.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.

இரணைதீவில் மக்கள் குடியிருந்த பகுதியை நில அளவீடு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலர் அடங்கிய குழு இன்று காலை 9 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்த நிலையில், மீண்டும் பிரதேச செயலகத்தை இன்று மாலை வந்தடைந்தது.

இந்த நிலையில் பூநகரி பிரதேச செயலர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரணைதீவு பூர்வீக காணிகளை அடையாளம் காணும் முகமாக பிரதேச செயலகத்தில் இருந்து நிலஅளவை திணைக்களத்தை சேர்ந்த உத்தியோகத்தர்களோடு, களவிஜயம் இடம்பெற்றிருந்தது.

இந்த அளவீட்டு பணிகளுக்காக 2017 ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைவாக பூர்வீக நிலங்களை எல்லைப்படுத்துவதற்காகவும், நில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இக் குழு சென்றிருந்தது.

அப்பிரதேசத்தில் பல இடங்களில் உள்ள எல்லைக் கற்களை அடையாளம் காணும் பணியில் எமது குழுவினர் ஈடுபட்டனர். கணிசமான எல்லைக் கற்கள் முதற்கட்டமாக அடையாளம் இடப்பட்டுள்ளது.

இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களது கருத்துப்படி ஏற்கனவே அளக்கப்பட்ட நில அளவை வரைபடத்தில் உள்ள கற்களை இனம்காணுவதற்கு ஏறத்தாழ பதினைந்து வேலை நாட்களுக்கு மேல் செலவிட வேண்டி உள்ளது.

ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தகவல்களை தங்களது பதிவை தகவல்களுடன் ஒப்பிட்டு ஒரு செயற்திட்டத்தை தயாரித்த பின்னர், அதன் களப்பணியில் ஈடுபட உள்ள உத்தியோகத்தர்களுடன் அங்கு தங்கி இருந்து தொடர்ச்சியாக அளவீட்டுப் பணிகளை முடிவுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

அதன் பினர் இவ் அறிக்கை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தகவல்களை தங்களது பதிவை தகவல்களுடன் ஒப்பிட்டு ஒரு செயற்திட்டத்தை தயாரிக்கவும் பதினைந்து நாட்கள் வரை தேவைப்படும் என மேலும் அவர் தெரிவித்தார்.