வாகரையில் மயானக் காணி ஒதுக்கீட்டில் தகராறு : பொலிஸில் முறைப்பாடு

Report Print Gokulan Gokulan in சமூகம்

வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளை பின்பற்றுவோருக்காக ஒதுக்கப்படவிருந்த மயானக்காணி தொடர்பாக சிலர் தகராறில் ஈடுபட்டமை தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக வாகரைப் பிரதேச சர்வமத ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

குறித்த காணியானது, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகரை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள, கணுக்காமடு எனும் கிராமத்தில் 40ஆம் கட்டைக்கு அருகில் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஒரு ஏக்கர் நிலம் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில, கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாததால் குறித்த பிரிவு மக்கள் பல்வேறு சிரமங்களை நீண்டகாலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் என்போரின் தலையீட்டில் குறித்த காணி மயானத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படவிருந்தது.

அதற்கமைய, இக்காணியைப் பார்வையிட மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் வாகரைப் பிரதேசதில் வாழும் கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைச் சார்ந்த ஆர்வலர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (8) குறித்த காணி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது திடீரென வந்து சேர்ந்த ஒரு குழுவினர் தகராறில் ஈடுபட்டதால் இவ்விவகாரத்தை வாகரைப் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வாகரைப் பிரதேச சர்வமத ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, இருசாராரையும் நேற்று (11) வாகரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த பொலிஸார் நாளை புதன்கிழமை (13) பிரதேச செயலாளர் தலைமையில் அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி முடிவெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.