கோரிக்கையை முன்வைத்து திருப்பெருந்துறை மக்கள் ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

எமது பிரச்சினையை அனைவரும் புரிந்துகொண்டு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என தெரிவித்து திருப்பெருந்துறையில் உள்ள மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு - திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

திண்மக்கழிவு நிலையத்தினால் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வந்துள்ள நிலையில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் குப்பைகள் கொட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

குப்பை கொட்டப்படும் பகுதியிலுள்ள மக்களை அப்பகுதியில் இருந்து அகற்றுமாறு சிலர் கூறிவருவதுடன், இதனால் 35 குடும்பங்களே பாதிக்கப்படுவதாக சிலர் தவறான வகையில் பேசிவருகின்றனர். திருப்பெருந்துறை பகுதியில் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

குப்பைகள் கொட்டுவதனால் திருப்பெருந்துறையில் உள்ள மக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு நகரில் உள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

மழைகாலத்தில் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீர் மட்டக்களப்பு வாவியுடன் கலப்பதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றனர்.

எமது பிரச்சினையை அனைவரும் புரிந்துகொண்டு ஆதரவு வழங்க முன்வர வேண்டும். நாங்கள் மட்டக்களப்பு நகரில் குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என்பதை மறுக்கவில்லை.

ஆனால் அதனை இங்கு கொட்டாமல் வேறு ஒரு மக்கள் இல்லாத இடத்தில் கொட்டுமாறே கேட்கின்றோம்.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்,

திருப்பெருந்துறையில் மக்களின் பிரச்சினையை அக்கறையுடன் நோக்க வேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் உள்ளூராட்சி அமைச்சு உள்ள நிலையில் இதற்கான விரைவான தீர்வினை எடுக்க வேண்டும்.

தெற்கில் அனர்த்தம் நடைபெறும்போது உடனடியாக செயற்பட்டு அதனை சில தினங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் மட்டும் முறையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை கவலைக்குரியது என தெரிவித்துள்ளார்.