விமானம் மீதான ஏவுகணை தாக்குதல்! விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் மேன்முறையீடு

Report Print Aasim in சமூகம்

தனது வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வழக்கொன்றை எதிர்த்து விடுதலைப் புலி உறுப்பினரொருவர் மேன்முறையீடு செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்புப் படைப்பிரிவின் முக்கியஸ்தரான இராசதுரை ஜெகன் என்பவரே இவ்வாறு தனக்கு எதிரான வழக்குக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பலாலியில் இருந்து ரத்மலானை நோக்கி வந்து கொண்டிருந்த அன்டனோவ் விமானம் ஒன்றுக்கு வில்பத்து வனப்பகுதியில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் விமானி உள்பட விமானத்தில் பயணித்த 37 பேர் உயிரிழந்திருந்தனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்புப் படைப் பிரிவின் பிரதானியான இராசதுரை ஜெகன் உள்ளிட்ட இரண்டு ​பேர் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

விடுதலைப் புலி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்கான அநுராதபுரம் விசேட மேல்நீதிமன்றம் குறித்த வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது குறித்து நீண்ட வழக்கு விசாரணையொன்றை நடத்தியிருந்தது.

கடைசியில் குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியமாக அதனை ஏற்று வழக்கை நடத்திச் செல்லுமாறு நீதிபதி மஹேஷ் வீரமன் உத்தரவு பிறப்பித்திருந்தார். எனினும் இராசதுரை ஜெகன் குறித்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.