அடையாள வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்

Report Print Aasim in சமூகம்

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் நாளை முதல் இரண்டு நாட்கள் அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் மேற்கொள்ளவுள்ள குறித்த அடையாள வேலைநிறுத்தம் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பாவனையாளர்களின் மின்பட்டியலை சீரான முறையில் கணக்கிட்டு மின் கட்டணத்தை அறவிடல், மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் மற்றும் சபையின் ஊழியர்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய சேமலாப நிதியை வைப்பிலிடுதல் ஆகியனவே மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கையாகும்.

மின்சார சபையின் உயரதிகாரிகளின் சுகபோக செலவுகளை பூரத்தி செய்யும் வகையில் பாவனையாளர்கள் மீது ஐம்பதுவீத மேலதிகக் கட்டணம் விதிக்கப்படுவதாக இன்று நடைபெற்ற மின்சார சபை ஊழியர்களின் செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது.

அத்துடன் மின்சார சபை ஊழியர்களின் சம்பளப் பணத்தில் இருந்து பிடிக்கப்பட்ட 2000 மில்லியன் ரூபா இதுவரை ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்பில் இடப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே தமது கோரிக்கைகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நிறைவேற்றித் தராது போனால் பதினைந்தாம் திகதி தொடக்கம் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் ​போவதாகவும் மின்சார சபை ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.