முச்சக்கரவண்டி சாரதிகளால் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக, கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முச்சக்கரவண்டி சாரதிகளால், வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச சபை முன்றலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடம் தொடர்பாக இரண்டு வருடங்களாக தமிழ் மற்றும் முஸ்லிம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கிடையில் பிரச்சினைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நடவடிக்கைளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி 10.07.2017 அன்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரியப்படுத்திய போது வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சுற்றுவட்டாரத்திலிருந்து மட்டக்களப்பு பாதை முச்சக்கரவண்டி தரிப்பித்தை தமிழ்த் தரப்பினர் பயன்படுத்த முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் தீர்மானத்தினை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்தே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதுடன், பத்து நாட்களுக்குள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட தீர்மானம் செயற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கறுவாக்கேணி பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள், பிரதேச மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன், ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

advertisement