முகமூடி மனிதர்களால் மாணவர்களுக்கு அச்சுறுத்தல்! 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Aasim in சமூகம்

அட்டன் பிரதேசத்தில் முகமூடி மனிதர்களால் அச்சுறுத்தப்பட்ட மாணவர்கள் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அட்டன், மஸ்கெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள மொன்டிபெயார்தோட்டப் பாடசாலைக்கு வருகை தந்து கொண்டிருந்த மாணவர்கள் குழுவொன்றை மூன்று ​பேர் கொண்ட முகமூடிக்கும்பல் அச்சுறுத்தியுள்ளது.

இச்சம்பவத்தினால் அச்சமடைந்த எட்டு மாணவிகள் மற்றும் மூன்று மாணவர்கள் தற்போது மஸ்கெலிய பிரதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முகமூடி நபர்கள் தங்களை அடையாளம் தெரியாதவாறு நன்றாக மறைத்திருந்ததுடன், அவர்களின் கையில் கூரான ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தியதைத் தவிர மாணவர்கள் மீது உடல்ரீதியான வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தினையடுத்து மஸ்கெலிய பிரதேசத்தில் கிறீஸ் மனிதர்கள் தொடர்பான அச்சம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

படங்கள் - திருமால்