ஏறாவூர் இரட்டைப் படுகொலை: இருவருக்கு பிணை

Report Print Kumar in சமூகம்

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த நூர்முஹம்மது உஸைரா (வயது 56) மற்றும் அவரது மகள் மாஹீர் ஜெனீராபானு (வயது 32) ஆகியோர் கடந்த ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் மற்றும் இஸ்மாயில் முஹம்மது பாஹிர் ஆகிய இரண்டு சந்தேகநபர்களுக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இதன்போது இருவரும் தலா இரண்டரை இலட்சம் ரூபா ரொக்க பிணையிலும் மற்றும் ஐந்து இலட்சம் ரூபா படி தலா இரண்டு சரீரப்பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் இருவரும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்படமிடல் வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உஸனார் முஹம்மது தில்ஷான், கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம்,புஹாரி முஹம்மது அஸ்ஹர், இஸ்மாயில் சப்ரின் ஆகிய நால்வரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

advertisement