குப்பைகள் அகற்றப்படவில்லை என தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

குப்பைகள் அகற்றப்படாத காரணத்தினால் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளததாக தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கல்லடியில் மகளிர் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை உப்போடையில் உள்ள பொதுச்சுகாதார பரிசோதகரின் அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கழிவுகள் அகற்றப்படாத காரணத்தினால் பாரிய சுகாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் பாதிக்கப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் அதற்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறாயினும் தற்போது மழை காலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் குப்பைகள் அகற்றப்படாவிட்டால் பாரிய சுகாதார பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்நோக்க வேண்டும்.

வீதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக அதன் வழியாக பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கூறுகையில்,

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு மாற்று இடங்களை பெறமுடியாத நிலை இருந்து வருகின்றது.

இதன்காரணமாக நீதிமன்றில் தற்காலிக தடையுத்தரவு நீங்கும் வரையில் வீடுகளில் சேரும் கழிவுகளை நீங்களே முகாமை செய்துகொள்ளுங்கள் என மாநகரசபையினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு வரவேற்பு கிடைத்ததுடன் பலர் அதனை மேற்கொண்டனர். ஆனால் சிலர் கழிவுகளை கண்டகண்ட இடங்களில் வீசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

எனவே மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை மாநகரசபை சேகரிக்கும் வரையில் குறித்த பகுதி மக்களே முகாமைத்துவம் செய்து கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

advertisement