குப்பை சேகரிப்பில் போலியான புள்ளிவிபரங்கள்! சம்பிக்க

Report Print Aasim in சமூகம்

கடந்த காலத்தில் குப்பை சேகரிப்பு நடவடிக்கைகளில் போலியான புள்ளிவிபரங்கள் மூலம் அரசாங்க நிதி கொள்ளையிடப்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மாடிவீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொண்டு கொம்போஸ்ட் உரம் தயாரிப்பதற்கான கருவிகள் இன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

குறித்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த காலங்களில் நாளாந்தம் 1300 தொன் குப்பைகள் கெரவலப்பிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்தில் கொட்டப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன.

அதற்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டிருந்தது.ஆனால் குப்பை சேகரிக்கும் லொறிகளில் எடை அளவீட்டுக்கருவி பொருத்தியதன் பின்னர் நாளாந்தம் 600 தொன் குப்பைகள் மட்டுமே அங்கு கொட்டப்படுவது தெரிய வந்துள்ளது.

அதே போன்று கொலன்னாவை நகர சபை தினமொன்றுக்கு 40 தொன் குப்பைகளை சேகரிப்பதாக தெரிவித்திருந்த போதிலும் 12 தொன் குப்பைகளை மட்டுமே சேகரிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறான தவறான புள்ளிவிபரங்களின் மூலம் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் தற்போது தடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.