15ஆம் திகதிக்கு பின்னர் காணாமல் போனோர் அலுவலகத்தின் முக்கிய பணிகள் ஆரம்பமாகும்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலக செயற்பாடுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் உரியவகையில் முன்னெடுக்கப்படும் என்று தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவாஞானஜோதி தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலக செயற்பாட்டு வர்த்தமானி அறிவித்தலில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(12) கையெழுத்திட்டார்.

இதனையடுத்து இந்த அலுவலகப்பணிகள் எதிர்வரும் 15முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அலுவலகத்தின் பணிகள் காணாமல் போனோரை அறிதலும் அதற்கான தீர்வை வழங்குவதுமாக அமையும் என்று அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்

15ஆம் திகதிக்கு பின்னர் காணாமல்போனோர் பணியகத்துக்கான தலைவர் உட்பட ஏழு அங்கத்தவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த நியமனங்களை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், பணியகத்துக்கான நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, பிரிவுகளுக்கான ஆளணி நியமனங்கள் இடம்பெறும்.

இதையடுத்து, அலுவலகங்களை எந்தப் பகுதிகளில் நிறுவுவது என்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும். இந்த அலுவலகம் நான்கு பணிகளை நோக்கமாக கொண்டு இயங்கும்.

  1. காணாமல்போனோரை தேடுவதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.
  2. அவர்கள் எவ்வாறான சூழ்நிலையில் காணாமல்போனார்கள்.
  3. அவர்கள் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றனர்.
  4. அத்துடன், இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் குறைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல்.

போன்ற நான்கு பணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் அலுவலகம் இயங்கும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.