யாழ். வடமராட்சியில் பட்டப் பகலில் கைவரிசையை காட்டிய திருடன் : தங்க நகைகள் கொள்ளை

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு பதினாறாம் கட்டைப் பகுதியில் பிரபல ஊடகவியலாளரொருவரின் வீட்டின் யன்னலை உடைத்து பட்டப் பகல் வேளையில் உள் நுழைந்த திருடர்கள் 40 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றைய தினம்(13) இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டின் உரிமையாளர்களான ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவியும் தொழிலுக்கும், பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்ற பின்னர் இன்று காலை 09 மணிக்கும், நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நண்பகல் 12 மணியளவில் வீட்டிற்குச் சென்ற வீட்டின் உரிமையாளரான பெண்மணி வீட்டின் யன்னல் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டுள்ளனர். இதன் பின்னர் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது ,வீட்டு அறையினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 40 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த தங்க நகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த இன்னொரு தொகுதி தங்க நகைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, திருடனொருவனின் கால்தடமொன்று கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற குறித்த வீட்டின் வளவில் தெளிவாகப் பதிவாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.