மட்டக்களப்பில் வீதி புனரமைப்பினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - மாமாங்கம் பிரதேசத்தில் நீண்டகாலமாக வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்படாமையினை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையினால் அதனூடாக பயணம் செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை சுட்டிக்காட்டி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

சகாயமாதா ஆலய வீதியின் சுமார் 100 மீற்றர் வரையான பகுதிகள் குன்றும் குழியுமாக இருப்பதனால் அப்பகுதியில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த வீதியில் சுமார் 200 மீற்றர் வரையான பகுதிகள் கடந்த காலத்தில் செப்பனிடப்பட்ட போதிலும் 100 மீற்றர் வரையான பகுதிகள் செப்பனிடப்படாத நிலையிலேயே தொடந்தும் காணப்படுகிறது.

மழைகாலங்களில் குன்றும் குழியுமாக உள்ள பகுதி நீரினால் நிரம்புகின்ற போது மக்கள் அந்த பகுதியூடாக பயணம் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சகாயமாதா ஆலயம் மற்றும் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த வீதியினை புனரமைத்து தருமாறு அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.