யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

Report Print Thamilin Tholan in சமூகம்

தமது குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி 65 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ். புத்தூர், மேற்கு கலைமதி கிராம மக்களுக்கு தீர்வு வழங்கக்கோரி நாளைய தினம் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண சபையே மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்று, மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து, கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், யாழில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானங்களால் பல்வேறு சுற்றுச்சூழல், சுகாதார மற்றும் உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும், ஏனைய அமைப்புக்களும் இணைந்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

எனவே, இந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற் சங்கங்கள், வர்த்தகர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.