மன்னாரில் தொடரும் விசமிகளின் அட்டகாசம்

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் மீண்டும் ஒரு திருச் சொரூபம் இன்று அதிகாலை விசமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாற்றுவெளி பகுதியில் வீதிக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியார் திருச் சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைபாடு ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ அவர்களால் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த பகுதிக்கு வந்த விசமிகள் கண்ணாடிபெட்டியை உடைத்து உள்ளே இருந்த புனித அந்தோனியாரின் திருச் சொரூபத்தை வெளியில் எடுத்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் உடைத்து சேதமாக்கப்பட்ட அந்தோனியார் சொரூபத்தை பார்வையிட்டதோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மன்னார் - சிறுநீலாசேனை கிராமத்திலுள்ள புனித யாகப்பர் திருச்சொரூபம் நேற்று இரவு அடையாளம் தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டிருந்தது.