தற்காலிகமாகக் கைவிடப்பட்ட யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் பெண் ஊழியரொருவருடன் இரு நிர்வாக அதிகாரிகள் தகாதமுறையில் நடந்துள்ளதாக தெரிவித்தும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் முற்பகல் ஒன்று கூடிய பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பொதுச் சபை தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைக் கைவிடுவதென ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரான த.சிவரூபன் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறும் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தின் போது குறித்த பிரச்சினைக்குத் தீர்க்கமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

இல்லாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதென இந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த தீர்மானத்திற்கு அமைய தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் முதல் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.