விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை மீதான தீர்ப்பு ஒக்டோபரில்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் முன்னாள் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜயந்த சுரவீரவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வழங்கப்படும் என அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் அறிவித்துள்ளார்.

கெப் வண்டியில் பயணித்து கொண்டிரந்த கேர்ணல் சுரவீர உட்பட 8 பேரை வில்பத்து வனத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை தளர்த்துமாறு சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை தளர்த்தினால், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராக இருப்பதாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காலிங்க ரவிந்திர நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

சூரியகாந்தன் ஜெயச்சந்திரன் மற்றும் சிவபிரகாஷ் சிவசீலன் ஆகியோருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் 6 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.