இருமுறை அனர்த்தங்களில் இருந்து தப்பியவன் நான்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

நான் இருமுறை அனர்த்தங்களிலிருந்து தப்பியவன், 2004இல் சுனாமியிலும், பின்பு அக்குறணையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலும் தப்பியுள்ளேன். எனவே அனர்த்த முகாமைத்துவ அறிவு அனைவருக்கும் அவசியமாகும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு இன்று அம்பாறை மொன்றி விடுதியில் இடம்பெற்றது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பிரதீப் கொடிப்பிலி தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,

ஒரு நாட்டிலுள்ள சட்டம் நிர்வாகம் நீதி ஆகிய துறைகளுடன் நான்காவது துறையாகவும் ஆனால் முக்கியமான துறையாகவும் ஊடகத்துறை விளங்குகின்றது. அம்பாறை பிராந்திய மூவின ஊடகவியலாளர்களை இங்கு ஓரிடத்தில் காண்பது மகிழ்ச்சியாகவுள்ளது.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் வறட்சி காரணமாக 63 ஆயிரம் ஏக்கரில்தான் வேளாண்மை செய்யப்பட்டது. அதாவது மொத்த நிலப்பரப்பில் 57 வீதமான காணிகளில்தான் செய்கை செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, மாவட்டத்தில் யானைத் தொல்லை இருந்துவருகின்றது. வருடாந்தம் 10 பேரளவில் யானையால் உயிரிழக்கின்றனர். இதுவரையில் அவர்களுக்கு 35 இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்கியுள்ளோம்.

மேலும் குடிநீர் பற்றாக்குறை நிலவும் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொண்டு வருகின்றோம், எனினும் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக ஓரளவிற்கு ஆறுதலாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.