பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வேலையற்ற பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள்

Report Print Suman Suman in சமூகம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளதாக வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 1000 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 18 - 28 வயதுடைய ஆண், பெண் இருபாலாரும் குறித்த பொலிஸ் சேவையில் இணைய முடியும்.

பொலிஸ் பற்றாக்குறையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 500 பொதுமக்களுக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரே காணப்படுகிறார். இதனால் சேவைகளை வழங்குவதில் பெரும் இடர்கள் காணப்படுகின்றன.

வேலையற்ற பட்டதாரிகளிற்கு பொலிஸ் நிலையத்தில் சேவைபுரிய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பில் அவர்களுக்கு பொருத்தமான பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன.

இதேவேளை, வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் பின்னணியில் ஆயுத குழுக்கள் எதுவும் இல்லை. மது போதையினாலும், தனிப்பட்ட பிரச்சினைகளாலுமே குற்றம் இழைக்கின்றனர்.

வட மாகாணத்தில் உள்ள மக்களில் 99 சதவீதமானோர் நல்லொழுக்கம் கொண்டவர்கள். ஒரு சிலரது செயற்பாடுகளால் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.