வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால் கறுப்பு கொடி ஏந்தியே தீபாவளி கொண்டாடுவோம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

வாக்குறுதிக்கு அமைய 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் தீபாவளியை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம் என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமது நிலைமை தொடர்பில் நாவலப்பிட்டி, உனுகொட்டுவ தோட்ட தொழிலாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளனர். தொடர்ந்தும் கூறுகையில்,

வாக்களியுங்கள் சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்று வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம்.

தொழிலாளர்களுக்கு துரோகம் நினைக்க இனிமேலும் இடம் கொடுக்க போவதில்லை. நாங்கள் விழித்துகொண்டே இருக்கின்றோம். எங்களுடைய பண்டிகை காலத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது.

அத்தோடு தீபாவளி பண்டிகைக்காக 10000 ரூபா பெற்றுத் தருகின்றோம் என கூறியவர்கள் தற்போது எங்கே இருக்கின்றார்கள்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் நாங்கள் இம்முறை தீபாவளியை கறுப்பு கொடி ஏந்தியே கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளனர்.