பூரண கதவடைப்பு பேராட்டத்திற்கு வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு பூரண ஆதரவு

Report Print Thileepan Thileepan in சமூகம்

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றல் என்பவற்றை வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள பூரண கதவடைப்புக்கு வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தனியார் துறையினர், ஆசிரியர் சமூகம், அரச ஊழியர் சங்கம் என்பவற்றின் ஒத்துழைப்புக்களையும் கோரியுள்ளது.

யுத்தம் முடிவடைந்து தற்போது 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அரசியல் கைதிகள் பலர் எந்தவித விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், வவுனியா மேல் நீதிமன்றில் மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிராக உள்ள வழக்கினை அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு 20 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையில் 17ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் மூவரின் நிலை மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது.

அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அரசாங்கம் அவர்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வை வழங்க வலியுறுத்தி வவுனியா மாவட்ட மக்களும், பொது அமைப்புக்களும் பூரண கதவடைப்புக்கு ஆதரவு வழங்குகின்றோம் என வவுனியா வெகுஜன போராட்ட ஒருக்கமைப்புக் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சமூகத்தையும், தனியார் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தையும் ஆதரவு வழங்குமாறும் கோரி நிற்கின்றோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.