நூறு வருடங்களுக்கும் மேலாக ஏக்கத்துடன் தமிழர்கள்!

Report Print Navoj in சமூகம்

நூறு வருடங்களுக்கும் மேலாக விமோட்சனம் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மயிலந்தனை கிராமத்தை சேர்ந்த பூச்சி காளிமுத்து என்பவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கிராமத்தில் யானை மற்றும் குடிநீர் பிரச்சினை உள்ள போதும், இது தொடர்பில் எந்த விதமான தீர்வும் கிட்டாத நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கிராமத்திற்கு தேவையான உதவிகளை தமிழ் அமைச்சர்களோ, தமிழ் அரசியல்வாதிகளோ செய்வதில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது போன்று தமிழ் அரசியல்வாதிகள் ஏன் தமிழ் பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியாது.

நூறு வருடங்களுக்கு மேலாக தமிழர்களின் நிலை இவ்வாறே காணப்படுகின்றது. ஏதும் விமோட்சனம் கிடைக்குமா என்ற ஏக்கத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எமது எல்லைக் கிராமத்தின் ஆதாரங்களுக்கு எந்த வேலைகளும் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் இதுவரை செய்யவில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் வாகன பேரணியாக வந்து வாக்களியுங்கள் என்று சொல்லி விட்டு, இதனை, அதனை சாதிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

ஆனால் இதுவரை எதனையும் சாதிக்கவில்லை. நாங்களாகவே போராட வேண்டிய நிலைதான் காணப்படுகின்றது. அத்தோடு எமது கிராமத்தில் காணப்படும் யானைப் பிரச்சினை சம்பந்தமான கிரான் பிரதேச செயலகத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது வரையில் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனது பயிர்களை யானை சேதமாக்கியது. இது தொடர்பாக உரியவர்களிடம் அறிவித்த போதும் எந்தவித நஷ்ட ஈடும் பெற்றுத் தரப்படவில்லை. அத்தோடு ஏப்ரல் மாதம் யானை வேலி அமைத்து தருவதாக பிரதேச செயலகத்தில் தெரிவித்தார்கள். இதுவரை அமைத்து தரவில்லை.

யானைத் தொல்லை காரணமாக இரவு நேரங்களில் நிம்மதியாக வீட்டில் உறங்க முடியாத நிலையில் காணப்படுகின்றோம். அத்தோடு குடிநீர் பிரச்சினை சம்பந்தமான பலதடவை முறையிட்டும் எங்களுக்கு மற்றுமுழுதாக தண்ணீர் கிடைப்பதில்லை.

ஓட்டமாவடி பிரதேச சபையால் ஆறு நாட்களுக்கு ஒரு தடவை நீர் வழங்குகின்றனர். அது எங்கள் அன்றாட பாவனைக்கு போதுமானதாக இல்லை. எனவே யானை பிரச்சினை மற்றும் குடிநீர் பிரச்சினை விடயத்தில் கவனம் செலுத்தி சிறந்த தீர்வொன்றை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.