ஜனாதிபதியின் யாழ். வருகை! போராட்டத்திற்கு தள்ளப்படுவார்களா தமிழ் மக்கள்?

Report Print Thamilin Tholan in சமூகம்

அரசியல் கைதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்துப் போராடி வருகின்ற நிலையில், அவர்களது நியாயமான கோரிக்கைகளைப் பொருட்படுத்தாது சனிக்கிழமை (14) அன்று ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.

இது தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்பதுடன், வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாது ஜனாதிபதியோ, எதிர்க்கட்சித் தலைவரோ வெறுமனே நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தருவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராகக் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தமிழ் மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள் எனப் பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் , அந்த வழக்குகள் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும், கோரிக்கையை முன்வைத்தும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 18 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தவிடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவெடுக்கும் அதிகாரமுடைய ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த போதிலும் கூட இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேவேளை, இது தொடர்பில் ஜனாதிபதியின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், அரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் காப்பாற்றி வருகின்றார்.

இவ்வாறானதொரு சூழலில், தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியின் மீதும், எதிர்க்கட்சித் தலைவர் மீதும் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் முகமாக நாளை வடக்கு மாகாணம் தழுவிய வகையில் கதவடைப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றோம்.

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்து ஜனாதிபதியும் சம்பந்தனும் சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வார்களாயின், அந்த நிகழ்வுகளைப் புறக்கணிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.