வவுனியாவில் சிறுவர்களை பயன்படுத்தி வியாபாரம்! பொலிஸார் எடுத்த நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகர்ப்பகுதியில் சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று இரவு 7 மணியளவில் குடியிருப்பு பூந்தோட்டம் பூங்கா வீதியில் வைத்து குறித்த அனைவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த பல மாதங்களாக வவுனியா நகர்ப்பகுதிகளில் சிறுவர்கள் வீதியோரங்களில் ஊதுபத்திகள் விற்பனை செய்து வருவதாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களை அவதானிப்பதற்கு சென்ற வவுனியா உதவிப்பிரதேச செயலாளர், இன்று மாலை சிறுவர்களுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்கள் குறித்த பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களின் பாவனைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கில், முச்சக்கரவண்டி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஒரு கூட்டு செயற்பாடாகவே இவ்வியாபாரத்தை மேற்கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது.

சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.