மீன்பிடியில் பெரும் சவால்களை எதிர்நோக்கும் வடபகுதி மீனவர்கள்

Report Print Yathu in சமூகம்

வடபகுதி தமிழ் மீனவர்கள் தமக்குச் சொந்தமான கடற்பரப்புக்களில் மீன்பிடி செய்வதில் பலத்த சவால்களை எதிர்கொள்கிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மீன்பிடியை தமது வாழ்வாதாரமாக மேற்கொண்டு வரும் வடபகுதி மீனவர்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

வடபகுதியில் தமிழ் மீனவர்களின் தொழில் நிலையில் 2009ஆம் ஆண்டிற்கு பின்பு ஒரு விடுதலையற்ற நிலையே காணப்படுகின்றது.

இதற்கு சான்றாக அண்மையில் யாழ். காரைநகர்ப் பகுதியில் தொழில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையின் அதிவேக கண்கானிப்புப்படகு மோதியதில் சம்பவ இடத்திலேயே மீனவர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இதேபோல, முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழ் மீனவர்களின் படகுமீது தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் படகால் மோதியுள்ளார்கள், இவ்வாறான செயற்பாடுகள் கண்டனத்திற்குரியவை.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் மீனவர்கள் தொன்றுதொட்டு கடற்றொழில் செய்துவந்த நீண்ட கடற்பரப்புக்களையும் மீனவர்களின் ஒருபகுதி இறங்குதுறையையும் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறாக எமது வடபகுதி தமிழ் மீனவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் அண்மைக்காலமாக வலுப்பெற்று வருகின்றது. மேலும் வடபகுதியில் தென்னிலங்கை மீனவர்களைக் குடியமர்த்தி எமது வடபகுதி மீனவர்களுடைய தொழிலுக்கு வேட்டு வைத்திருக்கின்றார்கள்.

இந்நிலையில், எமது மீனவர்கள் தமது சொந்தக்கடற்பரப்பில் தொன்றுதொட்டு தொழில் செய்த இடங்களில் தற்போது உரித்தற்று அச்சத்துடன் தொழில் செய்வது கவலைத்தரும் விடயம் என குறிப்பிட்டுள்ளார்.