மீண்டும் சவுதி அரேபியா சென்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

Report Print Kalkinn in சமூகம்

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக தண்டனை அனுபவித்த இலங்கையர் ஒருவர், தனது நாட்டிற்கு சென்று மீள வருகைத் தந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர் அதே குற்றச்சாட்டின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவினால் இந்த சம்பவம் குறித்த குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளது.

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று காரணமாக, பதுளை மாவட்டத்தை சேர்ந்த டி.எம். ஜயவர்தனவிற்கு இரு வார கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் சவுதி அரேபியா நோக்கி சென்றுள்ளார்.

நோய்வாய்ப்பட்டுள்ள தனது புதல்வருக்கு சிகிச்சைகளை பெற்றுக் கொடுப்பதற்கான நிதி திரட்டும் நோக்குடன் தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக் கொண்டு அவர் சவுதி அரேபியா நோக்கி பயணித்துள்ளார்.

இந்த வாகன விபத்து மற்றைய வாகனத்தின் தவறு காரணமாக இடம்பெற்றிருந்த போதிலும், அந்த சந்தர்ப்பத்தில் குறித்த இலங்கையர் மீது சிலர் தாக்குதல் நடாத்தியிருந்தமையினால், அவரின் பாதத்தில் கடும் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு வருகைத் தந்த டி.எம்.ஜயவர்தனவிற்கு, அவரது தொழில் வழங்குநர் எஞ்சிய சம்பளத் தொகையையும் வழங்கவில்லை.

சில மாதங்களின் பின்னர் குறித்த தொழில் வழங்குநர் டி.எம்.ஜயவர்தனவிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்வாறு பணிக்கு திரும்பும் பட்சத்தில் எஞ்சிய சம்பளத் தொகையை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், டி.எம்.ஜயவர்தன 2014ஆம் ஆண்டு மீண்டும் சவுதி அரேபியா நோக்கி பயணமாகியுள்ளார்.

இவ்வாறு சவுதி அரேபியா சென்ற அவர் பழைய குற்றச்சாட்டின் கீழ் அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 25 லட்சம் இலங்கை ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தண்டப் பணம் செலுத்த தவறும் பட்சத்தில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க நேரும் எனவும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான பாரிய நிதித் தொகையை செலுத்த முடியாமையினால், அவர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருவதாக கூறப்படுகின்றது.

குறித்த நபர் பிரச்சினையை எதிர்நோக்கி சந்தர்ப்பத்தில் அவருக்கு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராக எந்தவொரு சட்டத்தரணியும் முன்வரவில்லை என்பதுடன், இலங்கை தூதரகமும் முன்னிலையாகவில்லை என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

ஆங்கிலமோ அல்லது அரபு மொழியோ உரிய முறையில் தெரியாமையினால், நீதிமன்றத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்தும் டி.எம்.ஜயவர்தன தெளிவில்லாது இருப்பதாக கூறப்படுகின்றது.

சம்பவம் குறித்து டி.எம்.ஜயவர்தனவின் மனைவி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சவுதி அரேபியாவில் 190,000 இலங்கையர்கள் கடமையாற்றுவதுடன், அவர்களில் சுமார் 10,000 பேர் சாரதியாக அங்கு கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.