வாய்த் தர்க்கத்தினால் வந்த வினை! இளைஞர் பலி

Report Print Nesan Nesan in சமூகம்

கல்முனை, சாய்பு வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தினால் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போது கத்தியால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரண்டு மோட்டார் வண்டிகளுக்கிடையில் ஏற்பட்ட விபத்தின் போது 33 வயது மதிக்கத்தக்க கல்முனைக்குடியைச் சேர்ந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வீதி விபத்து கல்முனை பொலிஸாரினால் சமாதானம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் காயமடைந்த நபர் விபத்துடன் தொடர்புடைய மற்றை நபரின் பிரதேசத்திற்கு சென்று விபத்தை ஏற்படுத்திய நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக 24 மதிக்கத்தக்க உதுமான் லெப்பை மொகமட் சாஹீர் என்பவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கத்தியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.