மன்னாரில் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கம்

Report Print Ashik in சமூகம்

வடக்கில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி இன்று நடத்தப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார் மாவட்ட மக்களும் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்ற வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமெனவும் கோரி, குறித்த ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன், பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காத நிலையில் பாடசாலை நடவடிக்கைகளும் செயலிழந்துள்ளன.