காணிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதன் ஊடாக சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் மனித அபிவிருத்தி தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரந்திய இணைப்பாளர் இஸ்ஸடின் லத்திப்பின் வழிநடத்தலில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதான கருத்தாளராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவிக்கையில், எமது மாவட்ட செயலகத்திற்கு வருகின்ற பிரச்சினைகளில் மிகவும் அதிகமானது காணிப் பிரச்சினைகளாகும்.

இதனை நிவர்த்தி செய்வதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது ஆவணங்களை உண்மைத்தன்மையுடன் முறையாக உரிய அரச அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதன் மூலம் முடியுமான பிரச்சினைகளை அதிகாரிகள் நிவாத்தி செய்ய முன்வருவார்கள்.

காணி பிரச்சினைகள் பல அரச திணைக்களங்களுடன் தொடர்புபட்டுள்ளதால் அவற்றினை உரிய அதிகாரிகள் கலந்துரையாடி நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், மாவட்ட காணி அதிகாரி, உதவி காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், வன பரிபாலன திணைக்கள மாவட்ட அதிகாரி, வன இலாகா மாவட்ட அதிகாரி, சட்ட உதவி ஆணைக்குழு அதிகாரி, விவசாய அபிவிருத்தி அதிகாரிகள், காணி உத்தியோகத்தர்கள் மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கும் பொதுமக்களின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.