லிந்துலை வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

லிந்துலை வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட அங்கு பணிபுரியும் அதிகாரிகள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் தாதியர் ஒருவரை, இடமாற்றம் பெற்றுச் செல்லக்கோரி இன்று காலை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுட்டுள்ள போதிலும், சில தாதியர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் பிரபாஸ் கருநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

லிந்துலை வைத்தியசாலையில் பணி புரிந்த தாதியர் ஒருவர் நிர்வாகத்திற்கு தொடர்ந்து இடையூறை ஏற்படுத்தி வந்ததுடன், கடமையை சரிவர செய்யாமலிருந்தமையினால் அவரை கொட்டகலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்தோம்.

அந்த இடமாற்றத்தை இரத்து செய்து, மீண்டும் லிந்துலை வைத்தியசாலைக்கு அவர் கடமைக்கு வந்துள்ளார்.

இவ்வாறானவர்கள் இந்த வைத்தியசாலையில் இருக்கும் பட்சத்தில் எமது கடமையை திறம்பட செய்ய முடியாது என்பதுடன், வரும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையையும் செய்யமுடியாது.

எனவே குறித்த தாதி வைத்தியசாலையை விட்டு இடமாற்றம் பெற்று செல்லும் வரை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த தாதி இரேசா பரவிதான கருத்து தெரிவிக்கையில்,

நான் நிர்வாகத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்கவில்லை, எமது உரிமையையே கோரினேன். அத்துடன், சட்ட ரீதியான இடமாற்றம் கிடைத்தால் நான் இங்கிருந்து செல்லத் தயாராக உள்ளேன்.

அவ்வாறு இல்லாமல் வைத்தியரின் முறைப்பாட்டுக்கமைய வழங்கப்படும் இடமாற்றத்தை ஏற்று இங்கிருந்து செல்லமுடியாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பினால் சிகிச்சைக்காக வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.