காட்டுப்பகுதியில் மது உற்பத்தி! சுற்றிவளைத்த பொலிஸார்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக மது உற்பத்தி செய்யப்பட்டு வந்த இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வவுணதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை இன்று அதிகாலை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது சுமார் 400 லீட்டர் மதுபானம் மீட்கப்பட்டதுடன், அங்கிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்த முற்றுகை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலுப்படிச்சேனை காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, 154 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் 14000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்துள்ளார்.

மேலும்,மதுபாவனையினை குறைக்கும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கு அமைவாக வவுணதீவு பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.