உண்ணாவிரதமிருந்த மூவரின் தாய் மற்றும் மனைவியின் உருக்கமான பதிவு! 29இல் தீர்வு?

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

அனுராதபுரம் நீதிமன்றுக்கு தமது வழக்குகளை மாற்றவேண்டாம் எனக்கோரி 30 நாட்களுக்கும் மேலாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறந்த தீர்வு 29ம் திகதி வரும் என ரெலோ அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிவன் அறக்கட்டளை நிறுவுனருமான கணேஷ் வேலாயுதம் கூறியுள்ளார்.

யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகள் 3 பேருடைய வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்படக் கூடாது எனக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 3 சாட்சிகளில் ஒரு சாட்சி வவுனியாவில் வழக்கை நடத்த இணங்கியுள்ளார்.

மற்றைய 2 சாட்சிகள் நாட்டில் இல்லை. அவர்கள் வெளிநாட்டில் உள்ளதாக கூறுயுள்ளார்.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சட்டத்தரணியுடன் பேசியபோது 29ஆம் திகதி வழக்கு எடுக்கப்படும் போது சட்டமா அதிபருடைய கருத்து எடுபடாது எனவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதவானின் கருத்தே எடுபடும் எனக் கூறியுள்ளார்.

எனவே 29ஆம் திகதி சட்ட ரீதியாக சாதகமான தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அரசியல் கைதிகளின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் கைதி தர்சனின் தாய் சித்திரா..

பெருங்குற்றம் செய்தவர்கள் வெளியில் இருக்கின்றார்கள், ஆனால் இவர்கள் சிறு சிறு குற்றங்கள் புரிந்து இருக்கலாம், எனினும் அவர்களை விடுவிக்க வேண்டும்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் மகனின் உடல் நிலை மிக மோசமாகியுள்ளது. கடுமையான நோய்கள் ஏற்பட்டுள்ளன.

அரசியல் கைதி சுலக்சனின் தாய் புஸ்பமாலா..

கணவன் தான் ஆரம்பத்திலிருந்து சென்று என் மகனை பார்த்து வந்தார். நான் பல வருடமாக மகனை பார்க்கவில்லை.

இப்போதுதான் பார்த்தேன். என் கணவன் தற்போது உயிருடன் இல்லை. ஆண் துணையின்றி எனது பெண் பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். எனது மகனை விடுதலை செய்ய வேண்டும்.

அரசியல் கைதி திருவருளின் மனைவி சுபைதா

கடவுளிடம் தான் மன்றாடி வந்தோம், வழக்கில் வென்று வவுனியாவுக்கு மாற்றப்படும் என நம்புறோம். என மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்கள்.