தொடர்ச்சியாக வேலையற்ற பட்டதாரிகளை புறக்கணிக்கும் கிழக்கு ஆளுநர்

Report Print Kumar in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்ச்சியாக புறக்கணித்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது நியமனத்தை வலியுறுத்தி அமைதியான முறையில் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா இன்று காலை நடைபெறவிருந்த நிலையில் அந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்தார்.

இந்த நிலையில் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

எனினும், குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்து கொள்ளாத நிலையில் கவனஈர்ப்பு போராட்டத்தினை நடத்திவிட்டு பட்டதாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளிக்க பல தடவைகள் முனைந்த போதும் அவர் தங்களை புறக்கணித்ததாக வேலையற்ற பட்டதாரிகள் கூறியுள்ளனர்.

கிழக்கு மாகாணசபையில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தும், நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தும் தமக்கு ஏன் நியமனம் வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் கேள்வியெழுப்புகின்றனர்.

அரசே நியமனம் வழங்கு, இதுதான் நல்லாட்சியா, ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த அனைவருக்கும் நியமனம் வழங்கு, எமது கண்ணீருக்கு பதில் வழங்கு, ஒரே மாகாணத்தில் வெட்டுப்புள்ளி எதற்கு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.