சட்ட விரோதமாக மாடுகளை கொண்டு சென்ற ஒருவர் கைது

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோதமாக மாடுகளை கொண்டு சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை நேற்று இரவு கைது செய்துள்ளதுடன்,மாடுகளை கொண்டு சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் காணாமல்போனமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சிவில் பாதுகாப்பு குழுக்கள்,கிராமிய குழுக்களை தெளிவுபடுத்திவந்தனர். இதனடிப்படையில் இளைஞர் குழுவினர் விழிப்புடன் செயற்பட்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் கொக்கட்டிச்சோலை பகுதியில் சிறிய கன்டர் வாகனத்தில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதை அவதானித்த இளைஞர்கள் குழுவினர் இந்த வாகனத்தை நேற்று இரவு 8 மணியளவில் மடக்கி பிடித்துள்ளனர்.

இதன்போது சிறிய கன்டர் ரக வாகனத்தில் ஏழு மாடுகள் அடைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், குறித்த மாடுகளைக் கொண்டுசெல்வதற்கான எந்த அனுமதிப்பத்திரங்களையும் உரியவர் கொண்டிருக்கவில்லையென கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மாடுகள் எங்காவது கொள்ளையிடப்பட்டதா அல்லது யாராவது விற்பனை செய்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பட்டிப்பளை பகுதியில் பல வருடங்களாக மாடுகள் காணாமல்போகும் சம்பவங்கள் நடைபெற்றுவருவதாகவும் ஆனால் உரியவர்கள் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், மாடுகளை வளர்த்து அதன் மூலம் தமது குடும்ப வருமானங்களை ஈட்டும் குடும்பத்தினர் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.