பின்தங்கிய பிரதேசத்தில் சேவை செய்ய தயங்கும் வைத்தியர்கள்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தேவையென்பதைத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றோம், ஆனால் பின்தங்கிய பிரதேசங்கள் என்பதால் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு நட்டாங்கண்டல் வைத்தியசாலை, துணுக்காய் வைத்தியசாலை, ஐயன்குளம் வைத்தியசாலை ஆகிய மூன்று வைத்தியசாலைகளுக்கும் வைத்தியர்கள் நியமிக்கப்படாது கடந்த மூன்று மாதங்களாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் இல்லாத நிலையில் குறித்த வைத்தியசாலை காணப்படுகின்றது.

இதனால் இந்த வைத்தியசாலைகளில் சேவை பெற வேண்டிய நோயாளிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மல்லாவி வைத்தியசாலைக்கும் ஏனைய தனியார் வைத்தியசாலைக்கும் செல்கின்ற நிலமை காணப்படுகின்றது.

இதனையடுத்து, குறித்த வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிக்குமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கடந்த வாரம் துணுக்காய் மாந்தைகிழக்கு ஆகிய பிரதேசங்களில நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களின் போது, இதற்குப் பதிலளித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பொறுப்பு வைத்தியர் கருத்துத்தெரிவிக்கையில்,

மேற்படி மூன்று வைத்தியசாலைக்கும் வைத்தியர்கள் தேவையென்பதை வெற்றிடமாகவே காட்டிவருகின்றோம், பின்தங்கிய பிரதேசங்கள் என்பதால் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை. இருந்தாலும், தற்போது வைத்தியத்துறையில் படிப்பை முடித்திருக்கின்ற வைத்தியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இவ்வாறு வைத்தியர்கள் கிடைக்கும் பட்சத்தில் தற்காலிகமாகவே இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அத்துடன், ஐயன்கன்குளம் நட்டாங்கண்டல் வைத்தியசாலையின் நோயாளர் காவுவண்டிகள் சேவைகளில் ஈடுபட்டுவருவதனால் அங்கு வரும் நோயாளிகளை உடனடியாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சிகிச்சை வழங்கக்கூடியதாக இருக்குமென குறிப்பிட்டுள்ளார்.