வடக்கில் நான்கு அதிவிசேட சிகிச்சைப் பிரிவுகள் அமைப்பு

Report Print Rakesh in சமூகம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா ஆகிய இடங்களில் நான்கு அதிவிசேட சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முன்மொழிவுக்கமைவாக இந்தப் பணிகள் நெதர்லாந்து அரசின் 60 மில்லியன் யூரோ நிதியுதவியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விசேட சத்திரசிகிச்சைப் பிரிவும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் விசேட விபத்துச்சேவைப் பிரிவும், மாங்குளத்தில் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலையும், வவுனியாவில் இருதய மற்றும் சிறுநீரக விசேட சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்படவுள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கம் பணியாற்றியபோது, 2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்துக்கான நீண்டகால சுகாதாரத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியது. கொழும்பு அரசின் சுகாதார அமைச்சுக்கு அது அனுப்பிவைக்கப்பட்டது.

அவர்களது அனுமதியுடன், இலங்கை தேசிய திட்டமிடல் அமைச்சினூடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டு திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இதற்கு ஒஸ்ரிய அரசு மற்றும் நெதர்லாந்து அரசு ஆகியன நிதியுதவி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு அரசுகளினது நிதியைப் பெற்று வாமிட் என்ற நிறுவனம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கமைவாக அந்த நிறுவனப் பிரதிநிதிகள், சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கம் இருந்தபோது வடக்குக்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திருந்தனர்.

ஆரம்பத்தில் மன்னார் மாவட்டமும் இந்தத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. எனினும், 60 மில்லியன் யூரோ நிதிக்குள், மன்னார் மாவட்டத்தில் சிறப்பு சிகிச்சைப் பிரிவை அமைக்க முடியாது. இதனால் மன்னார் மாவட்டம் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது, மன்னார் மாவட்டத்துக்கு மேலதிக நிதி பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள்ளே தனியான பிரிவாகவே சத்திர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.

கிளிநொச்சி மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் தற்போதுள்ள கட்டடங்களே அபிவிருத்தி செய்யப்பட்டு தனியான விசேட சிகிச்சைப் பிரிவு செயற்பட ஆரம்பிக்கும்.

மாங்குளத்தில் உள்ள வைத்தியசாலை முற்றுமுழுதாக ஆதார வைத்தியசாலைக்குரிய வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட்டு மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலைக்குரிய விசேட பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படும்.

இதேவேளை, வடக்கிலுள்ள 42 ஆயிரம் விசேட தேவையுடையோருக்கு இந்த வைத்தியசாலை உதவியாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.