மின்னல் வேகத்தில் தங்கச்சங்கிலி அறுப்பு: காரைதீவில் சம்பவம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவுப் பிரதேசத்தில் அமைந்துள்ள கடை உரிமையாளர் ஒருவரின் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் அறுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைதீவு- 1 விபுலாந்த வீதியலுள்ள விசுவலிங்கம் கோடீஸ்வரன் (வயது53) என்பவரின் பலசரக்குக்கடையில் நேற்று இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இப்னுஅசார் தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதாக கடை உரிமையாளர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர் ஒருவரை உரிமையாளர் கோடீஸ்வரன் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பொலிஸார் அவரைத்தேடிச் சென்றதும் அவர் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் பற்றி கடை உரிமையானர் வி.கோடீஸ்வரன் கூறுகையில்,

“நேற்று இரவு 8.45மணியிருக்கும். நானும் உனது உதவியாளரும் கடையில் நின்றிருந்தோம். மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தனர்.

ஒருவர் வீதியில் இயங்குநிலையில் மோட்டார் சைக்கிளில் நின்றார். மற்றவர் தலைக்கவசத்துடனேயே என்னிடம் 3 பிறிஸ்டல் கேட்டார். நான் பணத்தைப் பெற்றுக்கொண்டு கொடுத்தேன். அதை வைக்க வெற்றுப் பெட்டியொன்று கேட்டார்.

பெட்டியை எடுப்பதற்காக திரும்பியவேளை மின்னல் வேகத்தில் பாய்ந்து எனது கழுத்திலிருந்த மாலையை அறுத்துக்கொண்டு ஓடினார். நான் பின்னால் ஓடிப்போவதற்கிடையில் மோட்டார்சைக்கிளில் தயாராகவிருந்த நபர் இவரை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்.

எனது உதவியாளர் அவர்களை சிறிது தூரம் துரத்திச்சென்றார். முடியவில்லை. அவர்கள் நேராக மாளிகைக்காட்டுப்பக்கம் ஓடித்தப்பினர்.

ஆனால் அவர்கள் லைற் போடவில்லை. நம்பர் பிளேட்டைஇலக்க தகடை மறைத்து வெள்ளைத்தாள் ஒட்டியிருந்தார்கள். நான் மறுகணம் சம்மாந்துறை சென்று பொலிஸாரிடம் முறையிட்டேன்” என்றார்.