கொழும்பிலிருந்து ஹட்டன் சென்ற நபர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் நகரில் 713 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று அதிகாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரே கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் வந்த நபரை சோதனை செய்த போது குறித்த நபரிடமிருந்து ஆறு சிறிய பக்கட் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மிகவும் சூட்சுமமான முறையில் உடம்பில் மறைத்து வைத்து கொண்டு வந்தபோது, ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மேற்படி பஸ்ஸினை சோதனையிட்டபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோயின் பக்கட்டுக்கள் கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் ஹெரோயினை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.