கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் அசாதாரண நிலை! விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து, பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பணியாளர்களின் திடீர் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதனால் தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக ஒல்கொட் மாவத்தை பகுதியில் பெரும் வாகன நெரிசல் நிலவியதுடன், ஒருவித அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புகையிரத பொதுமுகாமையாளர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதன்படி நாளை காலை 6 மணிக்கு புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்திற்கு ஓய்வுபெற்ற சாரதிகள் வருகை தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவே ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடையும் வரை இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.